இரத்த ஆறு ஓடிய யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து மனிதாபிமானம் நிறைந்த நாட்டை நாம் கட்டியெழுப்பியுள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, சுயநலத்துக்கே முன்னுரிமையளித்து வரும் உலகில் பொது நலத்துக்காக செயற்படும் மக்களுள்ள நாடு இலங்கை என பெருமை கொள்ள முடிகிறது எனவும் தெரிவித்தார். உலக இரத்த நன்கொடையாளர் தின நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் அனுஷ்டிக்கப்பட்டது. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள், சுகாதாரத்துறை முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளில் சிறந்த இரத்த தான சேவையை வழங்குவது இலங்கையே. இதனால்தான் அடுத்த வருடத்தில் உலக இரத்த நன்கொடையாளர் தின சர்வதேச மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இரத்த வங்கிக்கு 96 வீத இரத்தத்தை மக்களே தானமாக வழங்கியுள்ளனர். இது பாராட்டுக்கும் நன்றிக்கும் உரிய விடயம். மனித உயிர்களைப் பாதுகாப்பதற்காக
மக்கள் செய்த மகத்தான சேவை இது. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்கள் தமது இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளனர். இது பாராட்டுக்கும் நன்றிக்கும் உரிய விடயம். மனித உயிர்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் செய்த மகத்தான சேவை இது. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்கள் தமது இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளனர்.
வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகள் காலதாமதமாகிய காலம் ஒன்றிருந்தது. இரத்தம் இல்லாமையே இதற்கும் காரணம். இரத்த வங்கிகளில் இரத்தம் இல்லாத போது அது பற்றி பத் திரிகைகளில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.
இன்று நாட்டில் அந்த நிலை இல்லை. முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.
முப்பது வருடம் இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாத யுத்தத்தின் போது இரத்தம் பெருக்கெடுத்தது. அச்சமயம் நாட்டுக்காகப் போராடியவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக எமது நாட்டு மக்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்.
அது மட்டுமன்றி காயமுற்ற பயங்கரவாதிகளுக்கு இரத்தம் தேவைப்பட்ட போதும் அவர்களுக்கும் இரத்தம் வழங்கியது நாட்டுக்காக போராடிய படையினரே. இன்று நாட்டில் இரத்த ஆறு நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இப்போது அமைதியும் சுதந்திரமும் நிலவுகிறது.
அகதி முகாம்கள் இப்போது இல்லை. மக்கள் சுயாதீனமாக இரத்த தானம் செய்யும் முகாம்களே இப்போதுள்ளன. அமைப்பு ரீதியாக இச்செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களை நாம் விருது வழங்கி இப்போது கெளரவிக்கின்றோம். இது நாடு என்ற ரீதியில் நாம் பெருமைப்படும் விடயம். அதனால்தான் இரத்த நன்கொடையாளர் தினம் ஏனைய முக்கிய தினங்களிலிருந்து வேறுபட்டுள்ளது. இது மனிதத் தன்மையின் பெறுமதிபற்றி சிந்திக்கின்ற தினமாக திகழ்கிறது.
இரத்த நன்கொடையாளர்கள் தினமான இன்றைய தினத்தில் நான் இரத்த தானம் வழங்குபவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். எந்த இனம், எந்த மதம், எந்த சமூகம் என்றாலும் சரி இரத்த தானம் செய்யும் போது உயிர்கள் வாழவைக்கப்படுகின்றன. அவ்வாறு இரத்தத்தைப் பெற்று வாழ்பவர்கள் உங்களை எப்போதும் நன்றியுடன் நினைவு கூருவர். நாமும் நாட்டின் சார்பில் உங்களை கெளரவப்படுத்துகிறோம்.
இரத்த நன்கொடையாளர் தினத்தை நாம் இன்று அனுஷ்டிக்கிறோம். இது மனிதாபிமானத்தைத் தெரிவிக்கும் தினமாகும். உலக நாடுகளைப் பொறுத்தவரை அதிக அளவில் இரத்த தானம் செய்யும் மக்கள் எம் நாட்டில் உள்ளனர்.
இப்போது உலகைப் பார்க்கும் போது சாதாரணமாகவே சுயநலவாதமே தலை தூக்கியுள்ளது. உலகில் பெருமளவிலான செயற்பாடுகளும் சுயநலத்தை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏனெனில் சுயநலத்துக்கே முன்னுரிமையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தன்னலம்பாராது செயற்படும் மக்களைப் பார்க்கும் போது பெருமைப்பட முடிகிறது.
நாட்டின் இரத்த வங்கிகளில் இரத்தம் பற்றாக்குறை நிலவிய காலத்தில் இரத்த வங்கி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது. அந்த சுவரொட்டியில் “என் போன்ற குழந்தை மரணத்திலிருந்து மீள்வதற்கு துளி இரத்தம் தாருங்கள் மாமா” என குறிப்பிடப்பட்டிருந்தமை நினைவுக்கு வருகிறது. தமது இரத்தத்தைப் பாலாக்கி குழந்தைகளை வளர்க்கும் நம் நாட்டு தாய்மார் இதனைப் பார்த்ததும் தெளிவடைந்தனர். அதனால் பொதுநலம் படைத்த ஆயிரமாயிரம் பேர் நமது நாட்டில் உருவாகியுள்ளனர். இது எமது நாட்டிற்குப் பெரும் பெருமை.
பிறரது வாழ்வுக்காக தமது கண்கள், தலை, உடல், இரத்தத்தை தானம் செய்வது மனிதச் செயலன்றி தெய்வச் செயலாகும். நமது பலர் நூறு தடவைக்கு மேல் இரத்த தானம் செய்தவர்கள்.
நாம் இரத்த ஆறு ஓடிய போராட் டங்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். கடந்த காலங்களில் எந்தளவு இரத்தம் ஓடியது என நாம் அறிவோம்” அது இரத்தத்திற்கான போராட்டம் அல்ல. இரத்தத்தை தியாகம் செய்து மனிதத் தன்மையே உயர்ந்தது எனக் காட்டிய போராட்டம். அந்த போராட்டத்திலும் எமது நாடு வெற்றி பெற்றுள்ளது என்பதை நாம் பெருமையாகக் குறிப்பிட முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
~THINAKARAN~