பொதுவாக மனிதன் அனைத்து விதமான விடயங்களையும் மேற்கொள்வது சுகதேகியான, நிம்மதியான வாழ்க்கையை மையமாகக்கொண்டேயாகும். தனது ஆரோக்கிய வாழ்க்கைக்காக வேண்டி மனிதன் இன்னோரன்ன வழிகளில் செலவுகளை மேற்கொள்கிறான். அது அவனுக்கு சாதகமாக அமைவதுமுண்டு சில நேரங்களில் பலனற்றுச் செல்வதுமுண்டு.
அந்தவகையில் இன்று உலகளாவிய ரீதியில் மேற்கத்தேய நாடுகளில் கூட இயற்கை மருத்துவத்துக்கு பாரியளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே இன்று நாம் யுனானி வைத்திய நிபுணர்Dr. பஸ்லுல் ஹக் எம். பௌஸ் அவர்களுடன் இயற்கை மருத்துவம் பற்றி கலந்துரையாடிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
இயற்கை மருத்துவத்தில் அதாவது ஆயர்வேத மற்றும் யுனானி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இல்லையென்பது அநேகமானவர்களிடையே உள்ள ஒரு கருத்து இது பற்றி விளக்கினால்,
நிச்சயமாக எமது சமூகத்திலே இன்று அநேகமானவர்கள் மெதுவாக இயற்கை மருத்துவத்தின் மகத்துவம் பற்றிய விளக்கங்களை பெற்றவர்களாக இயற்கை மருத்துவத்தின்பக்கம் தமது கவனத்தை தற்போது செலுத்திவருகின்றமையை காணக்கூடியதாக இருக்கின்றது. ஆயர்வேத மற்றும் யுனானி மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில்,' எந்த ஒரு தாக்கத்துக்கும் அதற்கு சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு' இது நியுட்டனின் விதியாகும். எந்த தாக்கம் நடைபெற்றாலும் அதற்குரிய பக்க விளைவுகள் வரத்தான் வேண்டும்.
இல்லை என்றால், தாக்கத்தினால் பலனில்லாமல் போய்விடும். நோய்களுக்கு எதிராக சிகிச்சை வழங்கினால் விளைவு ஏற்பட்டால் தான் நோய் குணமடைகின்றது என்று அர்த்தமாகும். பெறப்படும் விளைவு ஆரோக்கியமானதா அல்லது இன்னொரு நோயை உருவாக்குகின்றதா? என்பதில் தான் விடயம் இருக்கின்றது. உண்மையில் இயற்கை சிகிச்சை முறையினால் உருவாகின்ற விளைவுகள் மனிதனுக்கு ஆரோக்கியமானவையாகவே இருக்கின்றன. எனவே தான் இயற்கை மருத்துவத்தினால், இரட்டிப்பு ஆரோக்கியத்தை மனிதன் பெறுகின்றான்.
பலரும் கேட்கின்றனர். ஆயர்வேத மற்றும் யுனானி மருந்துகளினால், நோய்கள் குணமடைவதற்கு நீண்டகாலம் எடுக்கின்றது என்று இதன் உண்மை நிலை என்ன?
சிகிச்சை என்பது, தர்க்க ரீதியில் கூறுவதானால் நோய் ஒன்று பீடிக்கப்பட்ட நிலையில் நோயை குணப்படுத்தாமல் காலம் தாமதித்து குணப்படுத்தும் எனின் அதனை சிகிச்சை என்றே கூற முடியாது. எளிமையாக விளக்குவதெனில், அன்னாசி, தக்காளி போன்றவைகளை நாம் உண்கின்றோம். சூரை வளையா போன்ற மீன்களையும் உண்கின்றோம். நம்மில் பெரும்பாலானோருக்கு சரும அலட்சிகள் உடனடியாகவே ஏற்படுகின்றன. சாப்பிடும்போதே முரசு சொறிதல், போன்றன ஏற்படுகின்றன அல்லவா? மேலும், சிலருக்கு யானை வாழைப்பழம், வெண்டிக்காய் போன்றவற்றை உட்கொண்டவுடனேயே அடுக்கடுக்காய் தும்மல் போட்டுவிடுவார்கள். சிலருக்கு இளைப்பு வந்துவிடும்.
இன்னும் சிலர் கறுவா, முந்திரிகைப் பழம் என்பவற்றை சற்று அதிகம் உட்கொண்டால் வறண்ட இருமல் வந்துவிடும். இப்படி இருக்கும்போது இயற்கை மருத்துவத்தினால் உடனடி விளைவுகள் இல்லையென எப்படி சொல்வது, எனவே அதிலும் மூலிகை என்று பெயர்சூட்டப்பட்டவைகளின் தொழிற்பாட்டுத்திறன் எப்படி இருக்கும் என்று நீங்களே சிந்தித்துப்பாருங்கள். எனவே ஒருபோதும் கூறமுடியாது மூலிகை வைத்தியத்தினால் நோய்கள் குணமடைய நீண்ட நாட்கள் செல்லுமென்று. உண்மையில் இயற்கை மருத்துவத்தில் அவசர சிகிச்சை என்று ஒரு பிரிவு இல்லை. இதனால் மக்களிடையே இவ்வாறான தவறான எண்ணம் நிலவலாம். எங்கள் உணவுப் பழக்கம் மற்றும் எமது இயற்கை வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களினால் உருவாகும் நோய் நிலைகளுக்கு இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதுதானே மிகச் சிறந்ததாக அமையும்.
இயற்கை மருத்துவத்தில் நோய்நிலைகளை நிரந்தரமாக குணப்படுத்தலாம் என்றதொரு எண்ணக்கரு நிலவுகின்றது இதற்குரிய காரணம் என்ன?
ஆம் உண்மையில், நோய் என்பது ஆரோக்கியம் இல்லாமல் போகும் நிலையையே குறிக்கும். ஆரோக்கியத்தை இல்லாமல் செய்ய ஏதோ ஒரு காரணி தொழிற்பட்டிருக்கின்றது. அதாவது, ஆரோக்கியம் இல்லாமல் போவதை எமது உடலில் வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்துத்தான் உணர முடியும். உதாரணமாக, காலில் முள் குத்தியதும் சிறிது நேரத்தில் வலி, வீக்கம், செந்நிறமடைதல், அசைக்கமுடியாமை போன்றவற்றை எம்மால் உணர முடிகின்றது. எம்மால் அறியமுடிந்த குணங்குறிகளுக்கு மாத்திரம் சிகிச்சையளித்தால், அது சிறிது நேரத்தில் இல்லாது போகும் எனினும், உள்ளே முள் இருக்கும் வரை மீண்டு;ம் மீண்டும் குணங்குறிகள் உருவாகிக்கொண்டே இருக்கும். உண்மையில் இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை (Basic Principle) குணங்குறிகளை குணப்படுத்துவதைவிட நோய்க் காரணியைக் கண்டறிந்து அதனை உரிய முறையில் குணப்படுத்துவதாகும். மூல காரணிக்கு சிகிச்சையளித்தால், குணங்குறி தன்னிச்சையாகவே குணமடையும் அல்லவா? இதுவே நிரந்தர தீர்வாகவும் அமையும்.
இயற்கை மருத்துவத்தின் இன்னுமொரு இரகசியம் தான் நோயாளியின் நோயெதிர்ப்பு சக்தியை (Immunity)) அதிகரிக்கும் சிகிச்சைகளும், உடலை பலமடையச்செய்யும் மருந்துகளும் (General Tonic) சேர்த்தே ஒரு நோய்க்கு சிகிச்சையளிக்கும்போது வழங்கப்படும். இதனால் நோயின் பின்னரோ அல்லது சிகிச்சையின் பின்னரோ பின்விளைவுகள் தோன்றுவதில்லை.
ஆங்கில மருத்துவத்திற்கும் இயற்கை மருத்துவத்திற்குமிடையே உள்ள வேறுபாடுகள் என்ன?
ஆங்கில மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இரண்டிற்குமிடையில் பாரிய வேறுபாடுகளும் இடைவெளியும் உள்ளது. இரண்டும் வேறுபட்ட பாரிய இரண்டு துருவங்கள் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சி மிக வேகமானது என்றாலும், உலகில் அதன் வளர்ச்சி வேகம் நோய்களின் வளர்ச்சி வேகம் என்று கூறினாலும் தவறில்லை. ஆனால் அவசர சிகிச்சை, சத்திர சிகிச்சை போன்றவை நிகரற்ற ஒரு பெரும் சேவை தான் என்றாலும் ஆங்கில மருத்துவத்தின் அடிப்படை, நோய்க்கான அறிகுறிகளை வேகமாக குணப்படுத்தல் என்பதாகும். இதில்தான் இயற்கை மருத்துவமும் ஆங்கில மருத்துவமும் வேறுபட்ட துருவங்களாக தூரமாகிச் செல்கின்றன.
ஆங்கில மருத்துவத்தில் பல துறைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் அவை அனைத்தினதும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியாகவும் கவர்ச்சியாகவும் தோன்றுகின்றது. இதில் மருத்துவ பரிசோதனைகளின் வளர்ச்சியும் உள்ளடங்குகின்றது. அதாவது, இரத்த பரிசேதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், போன்ற பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் காணப்படுகின்றன. இவையனைத்தும் மருத்துவப் பொறியியல் சார் துறையின் வளர்ச்சியாகும். ஆங்கில மருத்துவத்திலிருந்து வேறுபட்ட துறைகளை சற்று தூரமாக்கி சிகிச்சைகளை மட்டும் நோக்குவோமாயின் முழுக்க முழுக்க இரசாயணத்தினாலானது என்பது அனைவருக்கும் விளங்கும்.
உதாரணமாக: சலி அல்லது சலியினால் ஏற்படும் மூச்சடைப்பு நிலையில் Broncho Dialator ஆக உபயோகிக்கப்படும் இரசாயணப் பதார்த்தம் ஆடதோடை எனும் தாவரத்திலிருந்த பெறப்படும் இரசாயனப் பதார்த்தமாகும். இவ்வியற்கை பொருளுக்கு ஒப்பான செயற்கை இரசாயண கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெவ்வேறு சுவாச நோய்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
அத்துடன் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் Tremadol இது கஞ்சாச் செடியிலிருந்து பெறப்படும் இரசாயணப் பதார்த்தத்தினால் உருவாக்கப்படுகின்றது. மேலும் மலச்சிக்கலுக்கு உபயோகிக்கப்படும் Fiber Gel இது ஒரு வகை தாவரத்தின் நார்களை (Ispagol) பதப்படுத்தி உருவாக்கப்பட்டவையாகும். அத்துடன் கசகசாவின் உமியும் பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு சில மருந்துகள் நேரடியாக தாவரங்கிலிருந்து பெறப்படும் இரசாயனப் பொருட்களையும் மற்றும் அதன் இரசாயனக் கட்டமைப்புக்கு ஒப்பானவையும் ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இயற்கையை செயற்கையாக்கி ஆரோக்கிய வாழ்வை ஆரோக்கியமற்றதாக நாமாகவே ஆக்கிகொள்வதைவிட இயற்கையை இயற்கையாக பயன்படுத்துவதுதானே மிகச் சிறந்ததாக இருக்கும்.
ஆங்கில வைத்திய சிகிச்சைகளில் – சிறுவர் நோயியல், மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் போன்ற பல்வேறு துறைகள் உள்ளடங்கியுள்ளன. இதைப் போன்று இயற்கை வைத்தியத்திலும் ஏதேனும் துறைகள் உள்ளனவா?
ஆம் நிச்சயமாக பல துறைகள் உள்ளன. அதிலும் மிகச் சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுபவைகளாக Dermatology, Rheumatology, Gynecology, Neurology போன்றவற்றைக் குறிப்பிடலாம். Dermatology எனும்போது தோல் நோய்கள் சாரந்த துறையாகும். உதாரணமாக Eczema (சிறங்கு), Psoriasis(சொறி சிறங்கு), Leucoderma (வெண்தோல்) Dermatographia(தோல் அலட்சி) போன்றவற்றிற்கு ஆங்கில மருத்துவத்தினால் சிகிச்சையளிக்க முடியாது என கைவிடப்பட்ட நோய்களாகும்.
இவ்வாறான நோய்களுக்கு மிக இலகுவாக எவ்வித பக்கவிளைவான நோய்களையும் ஏற்படுத்தாது சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் Corn, இது பாதத்தில் வரும் ஒரு வகை உண்ணி அல்லது தடித்த தோற்படையாகும். இதற்கு ஆங்கில சிகிச்சை முறையில் சத்திர சிகிச்சை தான் ஒரே வழியாகும். ஆனால், இயற்கை மருத்துவத்தில் ஒரு சில நாட்களில் எவ்வித சத்திர சிகிச்சைகளுமின்றி பரிபூரணமாக குணப்படுத்தலாம்.
இதேபோன்றுதான் Gynecology அதிலும் பெண்களிடையே பொதுவாக காணப்படும் நோய்களான வெள்ளை போதல் (White Discharge) மாதவிடாய் நிறுத்தம் (Amenorrhea) PCOD இவ்வாறான நோய்களுக்கும் ஆண்கள் தொடர்பான பாலியல் குறைபாட்டு நோய்களான Erectile Dysfunction, Impotency, Premature Ejaculation போன்ற நோய்களுக்கும் வெற்றிகரமான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இதனைப் போன்று தான் நரம்பியல் நோய்களான ஒற்றைத் தலைவலி (Migraine), கை கால் விறைப்பு போன்றனவும் ,அதாவது, எலும்பியல் நோய்களான Arthritis வாதம், முதுகு வலி போன்ற பொதுவான நோய்களுக்கும் சகலவிதமான சிறுவர் நோய்களுக்கும் வெற்றிகரமான சிகிச்சைகள் இயற்கை மருத்துவத்தில் வழங்கப்படுகின்றன.
Thanks: MadawalaNews (http://madawalanews.com/news/miscnews/6010)
