மே தினத்திற்கு இலங்கை போக்குவரத்து சபை பஸ் வழங்கியதால் நட்டம் ஏற்படவில்லை எனவும் கிடைக்கப்பெற்ற லாபத்தை பின்னர் வெளியிடவுள்ளதாகவும் பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹெரிசன் இன்று (09) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மே தினத்திற்கு அரசாங்கத்தால் 1000 பஸ்கள் பெறப்பட்டதாகவும் அதனால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2 கோடி நட்டம் ஏற்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி உண்மையா என ஹெரிசன் கேள்வி எழுப்பினார்.
அதில் நட்டம் ஏற்படவில்லை என்பதை பொறுப்புடன் கூறுவதாக பிரதி அமைச்சர் ரோஹன திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அப்படியானால் அதிக லாபம் கிடைத்திருக்கும் எனவும் அவ்வாறு கிடைத்த லாபம் எவ்வளவு எனவும் ஹெரிசன் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளிக்க தான் இன்று தயாராகி வரவில்லை எனவும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் பதில் அளிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.