ஓரிரு முஸ்லிம் எம்.பி.க்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில் கீழ்த்தரமாக நடந்து கொள்வதாகவும் இவர்களே பாராளுமன்றத்தில் சம்பந்தன் எம்.பி.யின் உரைக்கு இடையூறு விளைவித்ததாகவும் நீதியமைச்சரும் மு.கா. தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இலங்கைக்கு வருகைதந்த பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளருடனான சந்திப்பின்போது தான் தெரிவித்த கருத்துக்களை ஜனாதிபதியிடம் திரிபுபடுத்திப் போட்டுக் கொடுத்ததும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே எனவும் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்களது செயற்பாடுகள் தொடர்பில் தான் பெரிதும் மனம் வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் முஸ்லிம் எம்.பி.க்களைச் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வாரம் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் ஏற்பாட்டில் அவரது அலுவலகத்தில் பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளருடனான சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் நாட்டில் முஸ்லிம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்திருந்தார்.
இந்த சந்திப்பு முடிவுற்ற மறுகணம் அதில் கலந்து கொண்ட முஸ்லிம் எம்.பி. ஒருவர் உடனடியாக ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹக்கீம் தெரிவித்த கருத்துக்களை திரிபுபடுத்திக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.