BREAKING NEWS

Apr 7, 2013

பெண்ணின் அழகு பற்றி கருத்து சொன்னதற்கு வருந்துகிறேன்: ஒபாமா

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மகாணத்தின் தலைமை அரசு வழக்குரைஞராக இருக்கும் பெண்ணின் அழகு பற்றி கருத்து சொன்னதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
வியாழனன்று நடந்த ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலிபோர்னியா அட்டார்னி ஜெனரலாக இருக்கும் கமலா ஹாரிஸின் செயற்திறன், பணி மீது அவருக்குள்ள அக்கரை ஈடுபாடு ஆகியவை பற்றி பாராட்டிப் பேசிய அதிபர் ஒபாமா, அமெரிக்காவிலேயே மிகவும் அழகான அட்டார்னி ஜெனரல் என்றாலும் அது கமலா ஹாரிஸ்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.
பெண்ணொருவரின் அழகை குறிப்பிட்டு அதிபர் ஒபாமா பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியது கண்டு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பெண்களை அழகுப்பொருளாக பார்க்கும் மனோநிலையில் இருந்து சமூகம் விடுபட வேண்டும் என்பதற்காகத்தான் தாங்கள் போராடுவதாகக் கூறும் பெண்ணுரிமை அமைப்புகள், வேலையிடங்களில் பெண்கள் எப்படிப்பட்ட தடைகளை சிரமங்களை இன்னும் எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு அதிபரின் கருத்து ஒரு உதாரணம் என்று கூறியிருந்தன.
தனது கருத்து ஒரு சலசலப்பை ஏற்படுத்திவிட்ட சூழ்நிலையில், அதிபர் ஒபாமா அட்டார்னி ஜெனரல் கமலாவை தொலைபேசியில் அழைத்து தனது வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது.
கமலாவின் அழகைப் புகழ்ந்து தான் பேசியதால், உருவான சிக்கலுக்காக அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளதாக அது தெரிவிக்கிறது.
நெடுநாள் நட்பு
கமலாவின் தொழில்சார் திறன்கள் சாதனைகளை அதிபர் ஒபாமா எந்த வகையிலும் குறைக்க விரும்பவிலை என்றும், தனக்கு அவரை நெடுங்காலமாகத் தெரியும், தனக்கும் அவருக்கும் இடையில் நல்ல நட்பு இருப்பதாலுமே அதிபர் அப்படி பேசினார் என்றும் வெள்ளை மாளிகையில் விளக்கமளித்தவர் குறிப்பிட்டார்.
வேலையிடங்களில் பெண்களுக்குள்ள சவால்களை அதிபர் புரிந்துகொண்டுள்ளார் என்றும், பெண்களை அவர்களுடைய வேலைத் திறனை வைத்து மதிப்பிட வேண்டுமே ஒழிய அவர்களது வடிவை வைத்து அல்ல என்பதை அதிபர் வலியுறுத்துகிறார் என்றும் அந்த அதிகாரி விளக்கினார்.
அதிபர் ஒபாமா பெண்ணுரிமைக்காக் குரல்கொடுப்பவர் என்றாலும், கமலா ஹாரிஸின் நல்ல நண்பர் என்றாலும், அவர் சொன்ன வார்த்தைகள் சரியானவை அல்ல என்று எழுத்தாளர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
கலிஃபோர்னியா அட்டார்னி ஜெனரலாக கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்துவரும் கமலா ஹாரிஸ், தாய் வழியில் இந்தியப் பூர்வீகம் கொண்டவர். சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய பெண் மருத்துவர் ஒருவருக்குப் பிறந்தவர் இவர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &