விஸா அனுமதிக் காலம் முடிவடைந்த பின்னரும் சவூதி அரேபியாவில் தங்கியிருந்து பணியாற்றும் இலங்கைப் பணியாளர்களுக்குப் பொது மன்னிப்புக் காலமொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது.சவூதியிலுள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தூதரகங்களுடன் இணைந்து பொது மன்னிப்புக் காலமொன்றைப் பெற்றுக்கொடுப்பது குறித்து ஆராயுமாறு சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தைப் பணிக்குமாறு, வெளிநாட்டு ஊக்குவிப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
விஸா அனுமதிக் காலம் முடிவடைந்த பின்னரும் சவுதியில் தங்கியிருந்து பணியாற்றும் பணியாளர்கள் நாடு திரும்புவதாயின் 200,000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு விஸா காலம் முடிவடைந்த பின்னரும் பணியாற்றும் 3000 இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் உள்ளனர். 300 பேர் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு தாம் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
விஸா அனுமதிக் காலம் முடிவடைந்த பின்னரும் சவுதியில் தங்கியிருந்து பணியாற்றும் பணியாளர்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கொண்டுவந்த புதிய சட்டம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்ற பணியாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.