(JM)ஊடகங்களுக்கும், இணையத்தளங்களுக்கும் செய்திகளையும், அறிக்கைகளையும் வழங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதே வேளை தாங்கள் வழங்கும் இந்த செய்திகளின் உண்மைத்தன்மை ஒரு பக்கம் இருக்க அறிக்கை விடும் நண்பர்களின் அறிக்கைகளும், கண்டனங்களும் ஆக்ரோஷமாக அமைந்திருப்பது தவிர்க்கப்பட் வேண்டிய விடயமாகும்.
கடந்த காலங்களில் இலைங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள எதிர்ப்புக்களுக்கும் அப்பட்டமான பொய் வதந்திகளுக்கும் முகம்கொடுத்துள்ள நாம் நீண்ட காலமாக இவ்விடயத்தில் பொறுமை காத்து வருவது பாராட்டுக்குரியதே. இருப்பினும் ஆங்காங்கு சில முஸ்லிம் நண்பர்களும், அரசியல் வாதிகளும், முக்கியமாக மத்திய கிழக்காசிய நாடுகளில் பணிபுரியும் நண்பர்களும் இணையத்தளங்களில் வெளியிடும் செய்திகள், உள்ளக்குமுறல், அறிக்கைகள் ஆனது சில வரையறைகளுக்குள் அமைந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
காரணம் இலங்கையில் உள்ள எல்லா சிங்களவர்களும் முஸ்லிம்களின் எதிரிகள் அல்லர். எல்லா பௌத்தர்களும் பொதுபலசென அமைப்பினர் அல்லர். அதிகளவான சிங்கள மக்கள் எமது நண்பர்கள், அயலவர்கள், எம்மோடு இணைந்து வாழ்பவர்கள். எம் சுக துக்கங்களில் பங்கெடுக்கும் அளவுக்கு எமக்கு நெருங்கியவர்கள். இப்படி இருக்க நமது கருத்துகள் அவர்களையும் நமக்கு எதிராக திருப்பிவிட வாய்ப்புக்கள் அதிகம்.
நான் ஒரு அரச பழ்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவன். இங்கு முஸ்லிம்களைவிட அதிகளவு சிங்கள தமிழ் மாணவர்கள் என்னோடு கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் நண்பர்களாக இணைந்து பழகி வருகிறோம். சில நேரங்களில் சில தவறான புரிதல்களால் பாதிக்கப்பட்டும் இருக்கிறோம். எமது இஸ்லாமிய நடைமுறையில் உள்ள சில விடயங்களை அவர்களது சூழல் அவர்களுக்கு தவறாக கற்றுக்கொடுத்தும் இருக்கின்றது. இவ்வாறான தவறான புரிதல்களை எம்மிடம் வந்து நேரடியாக அவர்கள் கேட்டும் இருக்கின்றனர்.
ஒரு சிங்கள நண்பன் என்னிடம் வந்து “நீங்கள் ஹஜ் பெருநாளுக்கு மாடுகளை அறுத்து அதிகாலையில் அதன் இரத்தத்தை புசித்தபின் தான் பள்ளிவாசலில் அல்லாஹ்வைத் தொழுவீர்களா ?’’ என்று கூட ஒருமுறை கேட்டுள்ளார். இப்படி எத்தனையோ விடயங்களில் அவர்கள் தவாறாக எம்மையும் எமது மார்க்கத்தையும் பற்றி உணர்ந்து வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் எமது சமூகத்தாரின் சில அணுகுமுறைகள் தான் என்பதில் தவறில்லை. எமது குறைகளையே இன்று அவர்கள் இஸ்லாத்தின் குறைகளாக கணிப்பிட்டுள்ளனர். இவருக்கு இப்படியான ஒரு எண்ணம் தோன்ற நமது சகோதரர்களின் ஏதோ ஒரு நடவடிக்கைதான் காரணமாக அமைந்திருக்கலாம் என எனக்கு எண்ணத்தோன்றுகிறது.
நாம் அவர்களுக்கு எமது புனித மார்க்கத்தை பற்றியும், புண்ணியமான கடமைகளைப் பற்றியும் சரியான முறையில் தெளிவூட்ட மறந்து விட்டோம். இந்த நிலையில் பெரும்பான்மையினருக்கு எதிராக சில முஸ்லிம்கள் வெளியிடும் அறிக்கைகளும் கண்டனங்களும் நமக்கு பாதகமாக அமையாத வண்ணம் இருக்க வேண்டியது முக்கியமாகும்.
இன்று சிங்களவர்களுக்கு எதிராக நாம் அறிக்கை விடுவதைத் தவிருங்கள். பொது பல சேனா செய்யும் தவறுகளுக்கு முற்றுமுழுதான சிங்கள நண்பர்கள் பொறுப்பல்ல. நாம் விடும் ஒவ்வொரு ஆக்ரோசமான கருத்துக்களும் நமக்கு இன்னும் பல எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை மறக்க வேண்டாம்.
சில நண்பர்கள் முகப்புத்தகத்திலும், இணையத்தளங்களிலும், ஏன் இன்று சுவரொட்டிகளிலும் ஜிகாத் செய்யத் தயாராகுவோம், சிங்களவர்களின் தலையைக் கொய்வோம், அவர்களின் பொருளாதாரத்தை முடக்குவோம், அரசாங்கத்தை கவிழ்ப்போம் என வீர வசனம் பேசுவதை முற்றாக தவிருங்கள். இது இன்னுமொரு முஸ்லிமை பாதுகாக்க நீங்கள் செய்யும் உதவி.
காரணம் கிழக்கு மாகான முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிராக தைரியமாக பேச முடியும், அதே வேளை கண்டி, கொழும்பு, மற்று இதர மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் சிங்களவர்களின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகிறார்கள். சுற்றும் முற்றும் சிங்களவர்களோடு நண்பர்களாக பழகி வருகிறார்கள். குடும்ப உறவுகளாக பேணி வருகிறார்கள். பழ்கலைகலகங்களிலும், கல்வியற் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள், வெளி ஊர்களில் தொழில் புரியும் இளைஞர் யுவதிகள் என எத்தனையோ முஸ்லிம்களின் தொடர்புகளானது இன்று சிங்களவர்களோடு பின்னிப் பிணைந்து உள்ளது.
எனவே நாம் விடும் அறிக்கைகளானது நம்மைத் தெளிவுபடுத்தும் அதே வேளை மற்றவர்களுக்கு அது எம்மீது எதிர்ப்பினை ஏற்படுத்தா வண்ணம் அமைய வேண்டும். அல்லாஹ் போதுமானவன்.
அக்கரைப்பற்று அஷ்ரப்.
வவுனியா வளாகம்
யாழ்ப்பாணப் பழ்கலைக்கழகம்.