BREAKING NEWS

Sep 19, 2012

இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்துக்கு ஜம்இய்யதுல் உலமா (ACJU) கண்டனம்

இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலாம் அவர்களை மோசமாக சித்தரித்து காட்டும் படம் அமெரிக்காவில்  தயாரிக்கப்பட்டமையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கண்டித்துள்ளது.

இப்படத்தினை தயாரிக்க துணை நின்று வெளியிட்ட நாடுகளையும் நபர்களையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வன்மையாக கண்டித்துள்ளது. அத்துடன் சாக்கு போக்குகள் சொல்லி தப்பித்துக்கொள்ளாமல் பகிரங்கமாக குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதே சரியான நிலைப்பாடாக இருக்க வேண்டும் எனவும் உலமா சபை தெரிவித்துள்ளது.

முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலாம் அவர்களை மோசமாக சித்தரித்து காட்டும் படம் தயாரிக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"உலகில் நிகழும் சில விடயங்களுக்கு மனித உரிமை என பெயரிட்டு கோஷம் கிளப்பும் நாடுகளை சமய நிந்தனை செய்வோருக்கு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதே அனைவரினதும் கேள்வியாகும்.

இந்நாட்களில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் பரவலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் கண்டனங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் உயிரிலும் மேலான முஹம்மது நபி (ஸல்) அலைஹி வஸ்ஸலாம் அவர்களை தொடர்புபடுத்தி மோசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டதே முஸ்லிம்கள் இவ்வாறு ஆத்திரம் கொள்வதற்கு காரணமாகும்.

காலத்துக்குக் காலம் இத்தகைய இழி செயல்களில் ஈடுபடும் கயவர்கள் இருக்கவே செய்வர். அவர்களுடைய முயற்சி இஸ்லாத்தின் வளர்சிக்காக வழியமைத்ததேயன்றி வீழ்ச்சிக்கு ஒரு போதும் துணை நிற்கவில்லை என்பது வரலாறு கூறும் சான்றாகும். 

இஸ்லாத்தை குறை கூறியோர், அல்குர்ஆனை கேலி செய்தோர், உத்தம நபியை இழிவுபடுத்தியோர் வரலாறு நெடுகிலும் இருந்தனர். அவர்களினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் படு தோல்வியையே கண்டன.

உறுதியான ஈமானுள்ள மக்கள் ஆத்திரங்கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பது வியப்பானதல்ல. என்றாலும் ஷரீஅத்தின் வரம்புகள் மீறப்படுவதனை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. சமய நிந்தனை செய்யும் எவராயினும் எந்த நாட்டை சேர்ந்தவராயினும் சட்டத்தை முன்னிறுத்தி கடும் தண்டனைகள் வழங்கப்படுவதன் மூலமே  உலக நிம்மதியை கண்டு கொள்ள முடியும்.

சமயங்களை தூற்றுவதும் இழிவுபடுத்துவதும் எந்தவொரு பயனையும் தரப்போவதில்லை. மாறாக சமயங்களை பின்பற்றுவோர் மத்தியில் வீணான குழப்பங்களையும் சண்டைகளையுமே மூட்டிவிடுகின்றன. இத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோருவதன் மூலமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்வதன் மூலமுமே முஸ்லிம்கள் தங்கள் அத்திரங்களை கொட்டுகின்றனர்". 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &