BREAKING NEWS

May 10, 2013

மின் கட்டண நிவாரண உறுதிமொழி பொய்; தயாசிறி எம்.பி.



மின்சாரக் கட்டணம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மே தினத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண உறுதிமொழியை அவரது சகோதரனான அமைச்சர் பஷில் ராஜபக்ஷ திருத்தங்களுக்கு உட்படுத்தியதன் மூலம் அவரது உறுதிமொழி பொய்யாக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் தெரிவித்தார்.
அரசாங்கமும் அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட ஊழல் மோசடிகளை எதிர்க்கட்சிகளை விமர்சித்து தப்பிவிடமுடியாது என்று கூறிய அவர் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள மின்கட்டண சூத்திரத்தை இல்லாது செய்துவிட்டு புதிய கட்டண சூத்திரம் ஒன்று வரையப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தின் நேற்று புதன்கிழமை அமர்வின் போது ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தயாசிறி எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
நுரைச்சோலை அனல் மின் நிலையம், சம்பூர் அனல் மின் நிலையம், கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையம் ஆகிய மின் உற்பத்தி நிலையங்களினூடாக பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 15 தனியார் நிறுவனங்களில் இருந்து இலங்கை மின்சார சபைக்கு 17 ஆயிரத்து 282 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியிருக்கின்றது.
இவ்வாறு பாரிய தொகை செலுத்தப்படாததாலும் அந்த தொகையை மின்சார சபையால் அறவிட முடியாததாலும் இன்று அந்த சுமை அப்பாவி மக்கள் மீது சுமத்தியிருக்கின்றது.
ஹெஜிங் உடன்படிக்கையினூடாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு முகம் கொடுத்த மக்கள் இன்று மின்சார சபை எதிர்கொண்டிருக்கும் நட்டத்தின் சுமையையும் ஏற்கவேண்டியுள்ளனர். மாறாக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையே எழுந்திருக்கவில்லை.
இலங்கை மின்சார சபையில் திருடர்கள் இருக்கின்றனர். இதனாலேயே இந்த நிலைமை எழுந்துள்ளது. மின்சார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள மின் கட்டண சூத்திரத்தின் பிரகாரம் அதிக மின் பாவனையாளர்களுக்கு குறைந்த கட்டணமும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு அதிக கட்டணமும் அறவிடப்படுவதாக அமைந்துள்ளது. எம்மைப் பொறுத்தவரையில் குறைந்தளவிலான மின் பாவனையாளர்களுக்கு குறைவான கட்டணமும் அதிக மின் பாவனையாளர்களுக்கு அதிக கட்டணமும் அறவிடப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இதுவே 2008இல் உயர்நீதிமன்றத்தாலும் கூறப்பட்டிருந்தது.
அரசாங்கம் மின் கட்டண அதிகரிப்பை அறிவித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மே தினத்தில் உரையாற்றிய போது மின் கட்டணத்தில் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், ்அந்த நிவாரணம் இதுவரையில் கிடைக்கவில்லை.
மேலும் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட நிவாரணம் அவரது சகோதரனான அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அப்படியானால் நாம் எதனை ஏற்பது, ஜனாதிபதியின் நிவாரணத்தையா அல்லது அமைச்சர் பஷிலின் திருத்தத்தையா என்ற கேள்வி எழுகின்றது.
மேலும் ஜனாதிபதியின் நிவாரண அறிவிப்பு பரீசிலனைக்கு உட்படுத்தப்பட்ட தன் மூலம் ஜனாதிபதியின் உறுதிமொழி இங்கு பொய்யாக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனமானது தான் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக இரண்டு ஜெனரேட்டர்களை வழங்கியிருக்கின்றது.
அப்படியெனில் எதிர்காலத்தில் பொதுமக்களும் தமது மின்கட்டணத்தை செலுத்த முடியாவிட்டால் தமது மேசை, கதிரை போன்ற உடைமைகளை மின்சார சபைக்கு கொடுக்க முற்படுவர்.
எனவே, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண சூத்திரத்தை இல்லாது செய்து புதிய சூத்திரம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &