பலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக குவதமாலா அங்கீகரித்துள்ளது. மத்திய கிழக்கு அமைதி பேச்சுவார்த்தையை வேகப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குவதமாலா ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.இதன்மூலம் பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் ஏனைய லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளுடன் குவதமாலாவும் இணைந்துகொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவு இஸ்ரேலுடனான தனது நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் இஸ்ரேலுடனான உறவை குவதமாலா அரசு மதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று குவதமாலா அரசு பலஸ்தீன தேசமும் இஸ்ரேல் தேசமும் சர்வதேச முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்பார்ப்பதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்புகளை அமைத்துவரும் நிலையில் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் முற்றாக நிராகரித்து வருகிறார்.