தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வில்பத்து விவகாரத்தில் மிகவும் கவனமாக ரிசாத் பதியுதீனுக்கு எதிராக பேசக்கூடியவர்களைத் தெரிவு செய்து நேற்றைய தினம் செய்தியில் அவர்களின் முகத்தைக் காட்டாது ‘கருத்து’ வெளியிட்ட சக்தி தொலைக்காட்சி, ஊடக தர்மத்தைப் பேணி அங்கு குடியிருக்கும் அல்லது அப்பகுதியில் குடியிருக்கும் ஏனைய மக்களிடம் நேர்மையான கருத்தைப் பெற்று இரு தரப்பு தகவல்களையும் வெளியிடத் தவறியதன் மூலம் ரங்கா வாங்கிய அடிக்கு ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை அழித்தொழித்தாலும் பழி தீர்க்கலாம் எனக் களமிறங்கி தமது முஸ்லிம் எதிர்ப்புப் போக்கைக் காட்டியுள்ளது.
ஊடகம் எனும் அடிப்படையில் வில்பத்து சென்று அங்குள்ள காட்சிகளைப் பற்றி கருத்துக் கூறிய சக்தி தொலைக்காட்சியால் எல்லை நிர்ணயம் தொடர்பில் உறுதியான தகவலைச் சொல்ல முடியவில்லை. மனிதர்கள் வாழும் பகுதிக்குள் மிருகங்கள் வருவது ஒன்றுதான் வனப்பகுதி என்பதற்கான ஆதாரம் எனும் அடிப்படையில் தகவல் வெளியிட்டு ரிசாத் பதியுதீனை எதிர்த்துப் பேசக்கூடியவர்களைத் தேடிப்பிடித்து உரையாட வைத்திருக்கும் சக்தி தொலைக்காட்சியால் பொறுப்பான திணைக்களங்களுக்குச் சென்று புள்ளிவிபரங்கள், அரச அதிபர் மற்றும் மாவட்ட செயலாளரிடம் சென்று ஆவணங்களையும் பெற்று குற்றச்சாட்டையும் அதே நேரம் விளக்கத்தையும் வெளியிட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, ஒரு பக்க சார்பாக ரிசாத் பதியுதீனைப் பழி வாங்குவதாக எண்ணிக்கொண்டு 25 வருடங்களாக நிரந்தர வதிவிடம் இன்றி அவதிப்படும் மக்களைப் பழிவாங்கக் களமிறங்கியுள்ளமை அதன் இனவாதப் போக்கை வெளிச்சத்துக்கு எடுத்து வந்திருக்கிறது.
மின்னல் ரங்கா தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவது தொடர்பில் கேள்வி கேட்ட ரிசாத் பதியுதீனிடம் ‘உம்முடைய சண்டித்தனத்தை மன்னாரில் வைத்துக்கொள்’ என்று வரம்பு மீறிப் பேசி அடி வாங்கிய மின்னல் ரங்காவின் இனவாதம் சக்தி தொலைக்காட்சி நிர்வாகத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று என்பதால் தான் இன்று அதற்கான பழி வாங்கல் நிகழ்கிறது என்பதை சக்தி தொலைக்காட்சி நிரூபித்திருக்கின்றது.
