BREAKING NEWS

May 12, 2015

வில்பத்து: மு.கா மற்றும் முஸ்லிம் தலைமைகளின் மௌனம் ஏன்?

வரையப்படாத அரசியல் எல்லைக் கோடுகளை வரைந்து தமக்குள் அதிகாரப் பிரிவினையையும் காழ்ப்புணர்ச்சிகளையும் வளர்த்துக்கொள்வதைத் தவிர்த்து சமூகப் பிரச்சினைகளுக்கு ஒன்றாகக் குரல் கொடுக்கும் ஒற்றுமையான அரசியல் பலத்தை இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்து ஏமாந்த பல சந்தர்ப்பங்கள் கடந்த ஆட்சியில் கண்டு சலித்துப் போன விடயமாகும்.

இதன் விளைவினால் மக்கள் அடைந்த விரக்தி, ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெளிச்சத்துக்கு வந்தது. நாட்டின் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தாம் ஒன்றாகக் கை கோர்த்துவிட்டதாக அறிவித்திருந்த போதும் அது ஊவா மாகாண மக்களால் நிராகரிக்கப்பட்டதோடு தம்முடைய அரசியல் தேவைகளை நாட்டின் பிரதான கட்சிகளோடு இணைந்தே நிறைவேற்றிக் கொள்ள அச்சமூகம் முடிவெடுத்திருந்தது.

காரணம், சந்தர்ப்பவாத அரசியல் கூட்டினை உடனுக்குடன் உணர்ந்து கொள்ளும் தகவல் களம் தற்போது போதியளவு இருக்கிறது. இந்நிலையில் சமூகப் பிரச்சினைகளில் அரசியல் ரீதியான ஒற்றுமையென்பது அதிகாரப் போட்டிக்கு முன்னால் என்றுமே எடுபடப்போவதில்லையென்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தொடர் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் வில்பத்து வனப்பகுதியை அண்மித்த மீள் குடியேற்ற விவகாரம்.

தேர்தலில் வாக்குப் பெறுவதற்கு இதே கிராமங்களுக்குச் செல்லும் கட்சிகள் இன்று அம்மக்களுக்குப் பிரச்சினையென்று வரும் போது அது குறித்து குரல் எழுப்பாது அது ரிசாத் பதியுதீனின் தனிப்பட்ட பிரச்சினையென ஒதுங்கி வேடிக்கை பார்ப்பது சுத்தமான அரசியல் நலனேயன்றி வேறு எதுவும் இல்லை.

தவிக்கும் முயலை அடிப்பது அரசியலின் அடிப்படை ஆயுதமாக இருப்பினும் அங்கு பாதிக்கப்படும் மக்கள் நலனைக் கொண்டு சிந்திப்பது சமூகத்தின் கடமையாகும். 25 வருடங்களுக்கு மேலாகியும் தாம் வெளியேற்றப்பட்ட மண்ணில் முழுமையாக மீள் குடியேற முடியாது அங்கும் இங்குமாக பரவி வாழும் வட மாகாண முஸ்லிம்களில் ஏதாவது ஒரு வகையில் வசதி கிடைத்தவர்கள் தம்மால் முடிந்த வழிகளில் வேறு இடங்களில் நிரந்தரமாகக் குடியேறி தாம் வாழ்வாதாரங்களையும் அமைத்துக் கொண்ட போதிலும் வெறும் 500 ரூபாவோடு விரட்டப்பட்டதிலிருந்து மீள எழ முடியாத மக்கள் மூன்றாவது கையை எதிர்பார்த்து வாழ வேண்டிய நிர்ப்பந்தமும் இதே அரசியல் சூழ்நிலை தந்தது என்பதை மறக்கலாகாது.

அவ்வாறிருக்க கடந்த காலங்களில் இம்மக்களை நாட்டின் ஏனைய பாகங்களிலாவது நிரந்தரமாகக் குடியேற்ற அரசோ, அரசியல் கட்சிகளோ, விசேடமாக முஸ்லிம் அரசியல் தலைமைகளோ எந்த வகையிலான முயற்சிகளை எடுத்தது எனும் வரலாற்றை மீட்டிப்பார்த்து அப்படி எதுவும் நடக்காத நிலையில் தமது மண்ணில் மீளக் குடியேறிய மக்களின் எதிர்கால இருப்புக் கேள்விக்குறியாகும் போதாவது அது குறித்து அக்கறை காட்டுவது கடமையாகாதா எனும் கேள்வி தொக்கு நிற்கிறது. இக்கேள்விக்கு விடையளிக்க முன்பதாக தமது அரசியல் நலனை முன்நிறுத்தி ஒருவனின் அழிவில் இன்னொருவனின் எழுச்சியெனும் நிலைப்பாட்டை மேற்கொள்வது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் என்பதை மக்கள் அறிய மாட்டார்கள் அல்லது மறந்து விடுவார்கள் எனும் அபத்தமான முடிவை எட்டுபவர்களுக்கு ஊவா மாகாண தேர்தல் சிறந்த உதாரணம்.

நடந்த சரி பிழைகளை ஆராய மஹிந்த ஆட்சியில் பயத்தால் முடங்கிக் கிடந்த முஸ்லிம் தலைமைகள் மைத்ரிபால ஆட்சியில் ஒன்று சேர்ந்து முன் வந்து அது குறித்து ஆராய்ந்து ஒத்தாசை வழங்கவோ அல்லது நீதியை நிலைநாட்டவோ முன் வரத் தயங்குவது ஏன்? எதனால் எனும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடமைப்பாடு தமக்கில்லையென இச்சமூகமும் அதன் தலைமையும் நினைப்பது தன் கண்ணைத் தன் விரலாலேயே குத்திக்கொள்வது போன்றது தான்.

நாளை இதே வடிவத்திலான வேறு சூழ்நிலை இன்னொரு பகுதியில் நிலவும் போதும் இந்த எழுதப்படாத அரசியல் எல்லைகள் பிராந்திய, பிரதேச, கொள்கை வாத பிரிவினைகளால் தான் தொடர்ந்தும் பிரித்தாளப்படும். முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு சமூகம் எனும் போர்வை அரசியல் வியாபாரத்தில் அவ்வப்போது மாத்திரம் தேவைப்படும் ஒரு விடயமாகவும், பிரச்சினைகளின் போது பிராந்திய, பிரதேச மற்றும் கட்சி வாதங்களுக்குட்பட்டதாகவும் இருக்கின்ற இந்த சூழ்நிலையின் நன்மையைப் பிரித்தாளும் வர்க்கம் என்றும் பயன்படுத்தும் என்பது திண்ணம்.

மன்னார் முஸ்லிம்களின் அவலத்தில் அரசயில் இலாபம் பார்க்கும் ‘தரத்தை’ விட்டு இறங்க முடியாத தொப்பியணிந்த, தாடி வைத்த, செருப்பணிந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் அடுத்த தேர்தலின் போது இறுகப் பற்றிக்கொள்ளப் போகும் சமூகப் போர்வை பிரதேச வாதத்தின் உச்ச கட்டமாகத் திகழும் என்பதையும் வராலாறு காணப்போகிறது.

– மானா

ரங்கா வாங்கிய "அடி": பழி தீர்க்கும் சக்தி TVயின் இனவாதம்!
கல்வியிலுமா பிரதேசவாதம்? கிழக்கு முதல்வருக்குக் கடிதம்

Comments

0 comments

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &