
சூடு பிடிக்கிறது வட மாகாண சபை தேர்தல் களம்
இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதி நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் மக்கள் வாக்களிக்கத் தயாராகிவருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், வடமேல் மாகாணத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம், தமிழ் சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக கேள்விக்குறியாகி வருவதாக கவலைகள் அதிகரித்துள்ளன.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணசபையைப் போல வடக்கு கிழக்குக்கு வெளியே சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கணிசமான அளவு செறிந்து வாழும் மத்திய மற்றும் வட மேற்கு மாகாணசபைகளிலும் இம்முறை தேர்தல் பரபரப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது.
வட மேல் மாகாணசபைக்காக குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலிருந்து 50 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக சுமார் 17 1/2 லட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருக்கிறார்கள்.
பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் முழுமையான ஆதிக்கத்தில் இருக்கின்ற இந்த மாகாணசபையில், சுமார் மூன்றரை லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிறுபான்மை சமூகத்தால் ஓரிரு உறுப்பினர்களையே கடந்த கால தேர்தல்களில் வென்றெடுக்க முடிந்திருக்கிறது.
அதிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிலிருந்து குருநாகல் மாவட்டத்தில் ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரை மட்டும் முன்னிருத்தியிருக்கின்றமையும் கவலைக்குரிய விடயமாகும்.
அத்துடன் இது மாகாண சபைக்குரிய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்குவதட்கான சதியெனவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது