இம்முறை மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஆரம்பகட்ட பாதுகாப்புக்கு 24,500 பொலிஸாரை கடடையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் தினத்தில் வாக்களிப்பு மத்திய நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் போது பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.
போக்குவரத்து சிக்கல் தீர்ப்பு மற்றும் கலகம் அடக்கவும் பொலிஸ் குழு நியமிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய 153 வன்முறைச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென அவர் கூறினார்.
அதில் 102 சிறுகுற்ற முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறிய 51 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக காமினி நவரட்ன குறிப்பிட்டார்.
தேர்தல் சட்டங்களை மீறிய 129 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 13 வாகனங்களும் பொலிஸார் வசமாக்கப்பட்டுள்ளன.
