ஹலால் நெறிமுறையற்றுப் பிறந்த ஒரு குழந்தை. இக் குழந்தை அங்கவீனமானது. இக்குழந்தைக்கு பிறப்புச்சாட்சிப் பத்திரம் பெற்றுக் கொள்ள ஜம்இய்யத்துல் உலமா சபை உலமாக்கள் மகாநாயக்கர் பின்னாலும் அரசாங்கத்தின் பின்னாலும் அலைந்து திரிகிறார்கள்.இது பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் இந்நாட்டு மக்களுக்கு ஹலால் பற்றி வழங்கிய விளக்கம்.பொதுபலசேனா இந்நாட்டில் மேற்கொள்ளவுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான பயணத்தை ஹலாலிலே ஆரம்பித்துள்ளது. இப்பயணம் நீண்டு செல்லவுள்ளது.
அதற்கான பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவே பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.கடந்த வாரம் கொழும்பு ஸ்ரீ சம்புத்தத்தவ நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலகொட அத்தஞானசார தேரர் தெரிவித்த கருத்துகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.ஹலால் விடயத்தில் ஜம் இய்யத்துல் உலமா சபை ஒரு இக்கட்டான நிலைக்குள்ளாகியுள்ளது. ஹலால் தொடர்பான விளக்கங்கள் பத்திரிகைகளில் விளம்பரங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.
வருடக் கணக்கில் அமைதி காத்த உலமா சபையின் ஹலால் பிரிவு தற்போது சவால்களை எதிர்நோக்கியுள்ளது.கடந்த வருடம் கொழும்பு நகர் பள்ளிவாசல்களில் ஹலால் சான்றிதழ் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் நிதி தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய துண்துப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. உலமா சபைத் தலைவர் உட்பட ஹலால் பிரிவு அத்துண்டுப் பிரசுரங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தனர். இப்பிரசுரங்கள் உலமாசபைக்கு நிச்சயம் எட்டியிருக்கும். ஆனால் அதற்கான பதில்கள் ஜும்ஆ மிம்பர்களிலோ உலமா சபையின் பொதுக்கூட்டங்களிலோ வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு பொது பலசேனா அமைப்பினால் ஹலால் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முதன் முறையாக முன்வைக்கப்பட்டபோது அக்குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் அல்லது ஹலால் தொடர்பான விளக்கத்தை ஹலால் பிரிவினரிடமிருந்து பெற்று செய்தி வெளியிடுவதற்கு ‘விடிவெள்ளி’ உடனடியாக ஹலால் பிரிவையும் உலமா சபையையும் தொடர்பு கொண்டபோது உலமாக்கள் எதுவும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 20க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கு பொறுப்புடன் பதில் வழங்கவில்லை.
நாங்கள் மசூரா செய்து ஊடகங்களுக்கு அறிக்கை விடுவோம் இப்போது எதுவும் கூற முடியாது என்றே தெரிவிக்கப்பட்டது. இறுதியில் ஹலால் தொடர்பான விளக்கம் ஒரு வாரத்தின் பின்பே தாமதித்து ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது என்பதை நினைவு கூருவது பொருத்தமானதாகும்.இலங்கை ஒரு பெளத்த நாடு. இந்நாட்டின் அரச மதம் பெளத்தம் அரசாங்க மதம் இஸ்லாம் அல்ல. முஸ்லிம்களின் ஷரீஆ சட்டம் எமது நாட்டுச் சட்டத்தின் ஒரு பிரிவும் அல்ல. ஹலால் இஸ்லாமிய சட்டத்தின் படியே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தினால் ஹலால் சான்றிதழ் வழங்க முடியாது. அதனால் ஹலால் சான்றிதழை முழுமையாக இல்லாமற் செய்ய வேண்டும் என்று பொதுபலசேனா இறுதியாக தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய வங்கிகள்ஹலாலுக்கு அடுத்து பொதுபலசேனா இஸ்லாமிய ஷரீஆ வங்கி முறையை நோக்கியும் அதனையடுத்து நாட்டில் முஸ்லிம்களுக்கென்று முஸ்லிம் தனியாள் சட்டத்தின் கீழ் இயங்கிவரும் காதிக்கோடுகளையும் நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நாட்டில் ஒரே பொதுச் சட்டம் அமுலில் இருக்க வேண்டும். இது பெளத்த நாடு. பெளத்த கலாசாரம், விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நாடு.
ஏனைய சமயங்களின் சட்டங்கள் மற்றும் ஷரீஆ சட்டங்களுக்கு இந்நாட்டில் இடமளிக்க முடியாது. இங்கு ஷரீஆ சட்டத்தின் கீழ் இஸ்லாமிய வங்கிகள் இயங்கிவருகின்றன. இந்த வங்கிகள் தொடர்பிலும் எமது கவனம் திரும்பியுள்ளது. இந்த ஷரீஆ இஸ்லாமிய வங்கிக்கு எதிராக பொதுபலசேனா வீடு வீடாகச்சென்று பிரசாரங்களை மேற்கொள்ளும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.காதிக்கோடு முறைமைஇந்நாட்டில் ஆங்கிலேயர் கால ரோமன், டச்சுச் சட்டங்கள் அமுலிலுள்ளன. இச்சட்டங்கள் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கென்று காதி நீதிமன்ற முறைமையொன்று உள்ளது. இதுவும் தவறு. இது பற்றி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுபலசேனா தயாராக உள்ளது எனவும் அவர்கூறினார்.எமது நாட்டில் 1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை காதிக்கோடுகள் அமல்படுத்தி வருகின்றமையை அமைப்பின் செயலாளர் அறிந்து வைத்திருக்காமை தெளிவாக விளங்கியது. ஊடகவியலாளரின் கேள்விக்கு விளக்கமான பதிலொன்றை அவரால் வழங்க முடியாமலிருந்தது.
முஸ்லிம் தனியாள் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.உலமாக்களைப் பின்தள்ள வேண்டும்உலமாக்கள் தமது செயற்பாடுகளில் 3 கிலோ மீட்டர்கள் முன்னேறிவிட்டார்கள். இவர்களை 3 கிலோ மீட்டர்கள் பின்தள்ள வேண்டியுள்ளது. இவர்கள் ஹலால் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். இவர்களிடம் கள்ள மனப்பான்மையே உள்ளது.உலமாக்கள் இந்நாட்டின் கலாசாரம், பெளத்த பாரம்பரியம், வரலாறு, பெளத்த மதம் என்பன பற்றி முழுமையாக அறிந்து யோசித்து செயற்பட வேண்டும்.தேசிய கீதம் இசைக்கப்படும் போது பெளத்த குருமார் ஏன் எழுந்து நிற்பதில்லை? என உலமாக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். எமது சமய கோட்பாடுகளின் படி குருமார் எழுந்து நிற்கத் தேவையில்லை.
எங்களிடம் கேள்விகள் கேட்பதற்கு இவர்கள் யார்? நாங்கள் உலமாக்களுடன் எதற்கும் தயாராகவே இருக்கிறோம்?எமது மக்களுக்கு சேவை செய்வதற்கும் எமது உரிமை, கலாசாரத்தைப் பாதுகாப்பதற்குமாகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதேவேளை, நாம் எமது வீட்டுத் தோட்டத்தை சுத்தப்படுத்துவது போன்று அடுத்த வீட்டுத் தோட்டத்தில் டெங்கு, எலிக்காய்ச்சல் பரவும் நிலைமை இருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால்நாட்டில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் உற்பத்தி செய்யப்பட வேண்டுமெனவும் உலமா சபை தெரிவித்துள்ளது. இது நடைமுறையில் சாத்தியமில்லை.
ஹலால் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்கள், உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் உபகரணங்கள், அனைத்தும் ஹலாலாக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.வெவ்வேறு இடங்களில் ஹலால் மற்றும் ஹலால் அற்ற பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டுமெனவும் உற்பத்தியில் ஈடுபடும் ஊழியர்கள் இருமுறைமைக்கும் ஒரே தொகுதியாக இருக்கக் கூடாது எனவும் உலமாசபை தெரிவித்துள்ளமை நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.இதனை கவனத்தில் கொள்ளாது ஒரே உற்பத்திச்சாலையில் ஹலால் மற்றும் ஹலால் அல்லாத பொருட்களை உற்பத்தி செய்வதும் விநியோகிப்படுவதும் விற்பனை செய்வதும் ஹராம் ஆகும். இது ஷரீஆ சட்டப்படி தவறானதாகும். எனவே முஸ்லிம்களுக்கு மாத்திரம் இலங்கையில் ஹலாலை நடைமுறைப்படுத்த முடியாது.சமயம் தெரியாத முஸ்லிம் அமைச்சர்இன்று முஸ்லிம் அமைச்சர்கள் கூட சமயத்தின் கோட்பாடுகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் அமைச்சரிடம் ஹலால் பற்றிய விளக்கம் கோரினோம். அவர் அளித்த பதில் எமக்கு ஆச்சரியத்தைத் தந்தது.எனக்கு ஹலால் பற்றி பூரணமாகத் தெரியாது. சமயம் தொடர்பான விளக்கங்களை உலமாக்களிடமிருந்தே பெற்றுக் கொள்கிறேன்.
உலமாக்களிடம் தான் ஆலோசனை கேட்க வேண்டும் என்றார்.உலமாக்களிடம் ஆலோசனை கேட்காதீர்கள். முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உருவாக்கியவர்களே இந்த உலமாக்கள் தான்.இந்நாட்டு முஸ்லிம்களை நாம் குறை கூறவில்லை. இந்த அடிப்படைவாத உலமாக்களையே நாம் விமர்சிக்கிறோம். முஸ்லிம்கள் பீதியடையத் தேவையில்லை.அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முயற்சிஜெனீவா மாநாடு நடைபெறும் இக்கால கட்டத்தில் உலமாக்கள் ஹலாலுக்கான அனுசரணையை அரசாங்கத்திடம் கேட்கிறார்கள். பொதுபலசேனா எதிர்க்கும் ஹலாலுக்கு அரசிடம் அனுசரணை கோரி அவ்வாறு வழங்கப்படாவிட்டால் சர்வதேச ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்க்ள்.ஹலால் அனுமதிக்கப்படாவிட்டால் லண்டன், சுவிட்சர்லாந்து மற்றும் அரபு நாடுகளில் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. உலமா சபையும் முஸ்லிம் அமைப்புகளும் இதன் பின்னணியில் உள்ளன.
அரசை தனிமைப்படுத்தி அந்த குற்றச்சாட்டினை பொதுபல சேனாவின் மீது சுமத்துவதே இவர்களது திட்டமாகும். ஹலால் சான்றிதழ் வழங்குவதை அரசு கையேற்கவில்லை. அரசு கையேற்கவும்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.இன உறவுகள் விரிசல்ஹலால் விவகாரத்தினால் இன்று இன உறவுகளுக்குள் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
மக்கள் பீதிக்கும் சந்தேகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். எல்லா இடங்களிலும் ஹலால் பற்றியே பேசப்படுகிறது.உலமாசபையே இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும். ஹலால் சான்றிதழ் வழங்கும் ஏற்பாட்டை அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியே ஆரம்பித்திருக்க வேண்டும். முஸ்லிம்கள் அடிப்படைவாத உலமாக்களின் செயற்பாடுகளுக்குக் கட்டுப்படாதீர்கள்.உலகில் ஹலால் இல்லைஉலகில் ஏன் அரபு நாடுகளில் கூட ஹலால் இல்லை.
சவூதி அரேபியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பிஸ்கட் கட்டாரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிஸ்கட் பக்கட்டில் ஹலால் இலட்சினை பொறிக்கப்பட்டில்லை. இறைச்சி வகைகளுக்கு இந்நாடுகளில் ஹலால் உள்ளது.ஓமான் மற்றும் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட பிஸ்கட்டுகளுக்கும் ஹலால் சான்றிதழ் இல்லை. இது சவூதி அரேபியாவில் உற்பத்தி ச்ெயயப்பட்ட பால். இது பற்தூரிகை இவற்றுக்கும் ஹலால் சான்றிதழ் இல்லை.இது சவூதி அரேபியா உற்பத்தி நூடில்ஸ் (சிக்கன் பிளவர்) இதற்கும் ஹலால் இல்லை. ஆனால் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும்தேங்காய் பாலுக்கும் ‘மன்சி’ பிஸ்கட்டுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது எவ்வகையில் நியாயமாகலாம் (குறிப்பிட்ட பொருட்களை) காண்பித்து கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்புகிறார்.உலகில் சில நாடுகளில் ஹலால் நடைமுறை இருந்தாலும் உலமா சபை அந்நாடுகளில் பணம் வசூலித்து சான்றிதழ் வழங்கும் நடைமுறையைப் பின்பற்றவில்லை. உலமா சபை பணம் வசூலித்து ஹலால் சான்றிதழ் வழங்கும் ஒரே நாடு இலங்கை மாத்திரமே.எஸ்.எல்.எஸ். தரச் சான்றிதழ்இலங்கைக்கு ஹலால் சான்றிதழ் தேவையில்லை.
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் போதுமானதாகும். இச்சான்றிதழ் சர்வதேச தரத்தினைக் கொண்டது.
இச்சான்றிதழ் பொறிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களின் விபரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த விபரங்களைக் கொண்டு அது ஹலாலா? ஹராமா? என்று தெளிவு பெற்றுக் கொள்ள இயலும்.எனவே ஹலால் சான்றிதழ் முற்றாக ஒழிக்கப்பட்டு எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழே நடைமுறையில் இருக்க வேண்டும் என்றார்.
