லண்டன்: சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளைத் திருமணம் செய்யும் ஆசையில், இங்கிலாந்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் 8 பேர் சிரியாவுக்கு சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களில், கிழக்கு லண்டன் பள்ளி ஒன்றில் படிக்கும் ஷமிமா பேகம்(15), கதிஜா சுல்தானா(16), அமிரா அபாஸி(15) ஆகிய மூன்று சிறுமிகள் லண்டனில் இருந்து இந்த மாதத்தில் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகவும், மற்றொரு மாணவி கடந்த டிசம்பர் மாதம் சென்றதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டுமின்றி, IS தீவிரவாதிகளுக்காக மணமகள் வலைத்தளங்களில் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து பெண்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில், குறிப்பிட்ட ஒரு தீவிரவாதியைத் திருமணம் செய்து கொள்ள மட்டும் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்துள்ளதாக இங்கிலாந்து செய்தி ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜுன் மாதம், இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த இரட்டை பிறவிகளான சல்மா மற்றும் சாரா ஹலானே ஆகியோர் இதேபோல் தீவிரவாதிகளைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் சிரியாவுக்கு சென்றனர். தங்களுக்கு பிடித்த, பொருத்தமான துணைவரை திருமணம் செய்து கொண்டனர்.
குர்தீஷ் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான பன்னாட்டுப் படைகளின் குண்டு வீச்சில் இவர்களின் கணவர்கள் பலியாகிவிட, தற்போது இந்த இரு பெண்களும் சிரியாவில் விதவைகளாக இருக்கும் தகவலையும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
