Oct 22, 2013
கெசினோ சட்டமூலத்தை வாபஸ்பெற அரசாங்கம் தீர்மானம்
Posted by AliffAlerts on 09:47 in NL | Comments : 0
கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை வாபஸ்பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கெசினோ சட்டமூலம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் கெசினோ சூதாட்ட மையங்களை அமைப்பது குறித்து அரசாங்கம் பாராளுமன்றில் சட்டமூலமொன்றை முன்வைக்க தீர்மானித்திருந்தது.
உபாயமார்க்க அபிவிருத்தி சட்டமூலத்தில் திருத்தம் என்ற பெயரில் கெசினோ உள்ளிட்ட இரு சட்டமூலங்களை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்திருந்தது. எனினும் அதற்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்கள் காரணமாக அவற்றை மீளப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1988 இலக்கம் 40 என்ற பந்தைய மற்றும் வரிச் சட்டமூலத்தில் கெசினோ திட்டத்திற்கு வரி நிவாரணம் வழங்கவென முன்வைக்கப்பட்ட இரு சட்டமூலங்கள் இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (21) இரவு இடம்பெற்றது.
அதன்போது கூட்டுக் கட்சிகளால் சட்டமூலங்களுக்கு பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் அத தெரணவிடம் தெரிவித்தார்.
அதனால் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதிக்காதிருக்கவும் சட்டமூலங்களை மீளப் பெற்றுக் கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் கெசினோ சட்டமூலம் பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
