BREAKING NEWS

Oct 20, 2013

ஹஜ்ஜின் போது பெண்ணுக்கு கண் பார்வை மீண்டது

மக்கா: துனிஷியாவிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்த, கண் பார்வையற்ற 70 வயது பெண்ணொருவருக்கு கண்பார்வை மீண்ட அற்புதம் சவூதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

நஃபீஸா அல் குர்மாஸி என்னும் பெயருடைய அந்த துனீஷியா தாய்க்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களுமாக ஐந்து பிள்ளைகள் உள்ளனர். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு அவருக்கு வாத நோய் ஏற்பட்டு கண் பார்வை முற்றிலுமாகப் பறி போனது. வயது மற்றும் நோயின் தீவிரம் காரணமாக அவருக்கு பார்வை மீள்வதற்கு வழியில்லை என்று மருத்துவர்கள்  நம்பிக் 'கை' விட்டிருந்தனர்.

"ஆனால்  நான் என்னிறைவன் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை" என்கிறார் மூதாட்டி நஃபீஸா. "புனித இடங்களை என் கண்ணால் காணும் பாக்கியத்தை வழங்கிடு இறைவா!" என்று பிரார்த்தித்த படி இருந்தேன் "

அவர் மேலும் கூறுகையில், "பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் அரஃபா வெளியில் நிச்சயம் என் துஆ (பிரார்த்தனை) ஏற்கப்படும் என்பதற்காகவே ஹஜ் செய்ய வந்தேன்" என்றார்.

"அரஃபா பெருவெளியில் உளமுருகிப் பிரார்தித்துக் கொண்டிருந்த போது, மெல்ல எனக்குப் பார்வை கிடைத்து அருகிலிருந்தவர்கள் புலப்படத் தொடங்கினார்கள். மிகுந்த சந்தோஷத்தில் வாய் விட்டு கத்தி விட்டேன்; அருகிலிருந்தவர்கள் பதற்றமடையும் அளவுக்கு" என்கிறார் நஃபீஸா. பிறகு அவர்களும் "அல்லாஹூ அக்பர்" என்று இறைவனைப் புகழ்ந்தார்கள்.

"இது என் இறைவன் நிகழ்த்திய அற்புதம்; அதுவும் உலகின் மிகப் புனிதமான இடத்தில்" என்று உள்ளம் கசிகிறார் அந்த மூதாட்டி.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &