கடுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவின் கடுகஸ்தோட்ட - குருநாகல் வீதி எலதெணிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்று (20) குருநாகலில் இருந்து கண்டி நோக்கி பயணித்த லொரியொன்று அதற்கு எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கார் சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய லொரி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் மொரட்டுவை மென்டிஸ் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர், படுகாயமடைந்த நிலையில் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கலுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மொரட்டுவ, ராவதாவத்தை வீதியைச் சேர்ந்த 72 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், வெலிகம பொலிஸ் பிரிவில் காலி - மாத்தறை பிரதான வீதியின் மிரிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி, பின்னாள் அமர்ந்து சென்ற அவரது மனைவி மற்றும் உறவினர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில். அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 52 வயதான சாரதி உயிரிழந்ததுடன் மற்றைய இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
(அத தெரண தமிழ்)
