BREAKING NEWS

Sep 27, 2013

குர்பான் கடமையை நிறைவேற்ற பொலிஸ் ஒத்துழைப்பு


முஸ்லிம்கள் தங்களது குர்பான் கடமையை நாட்டின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றும் அதற்கான ஒத்துழைப்பை பொலிஸ் திணைக்களம் வழங்குமென்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் உறுதியளித்துள்ளார்.

நேற்று தனது காரியாலயத்தில் தன்னைச் சந்தித்த முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையிலான குழுவினரிடமே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு உறுதிமொழியினை வழங்கினார். குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர்.

பொலிஸ் தரப்பில் பொலிஸ் மா அதிபருடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் (சட்டம்) காமினி திசாநாயக்க, பிரதி பொலிஸ் மா அதிபர் கருணாரத்ன, ஊடக பேச்சாளர் புத்திக சிரிவர்தன என்போர் கலந்து கொண்டனர்.

குர்பான் கடமை தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர்.

‘குர்பான் கடமையை போயா தினத்தில் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் கடந்த வருடம் பொலிஸ் திணைக்களம் குர்பான் கடமை தொடர்பாக வெளியிட்ட சுற்று நிருபத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவித்ததுடன் சுற்று நிருபத்தின் பந்திகள் இரண்டொரு தினங்களில் சகல பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

குர்பான் கடமையை நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய நிறைவேற்றுவதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டால் அது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.

இதேவேளை, குர்பான் கடமை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்து கலந்துரையாடியதாகவும் குர்பான் கடமைக்கு எதுவித தடைகளும் விதிக்கப்படமாட்டாதெனவும் பாதுகாப்புச் செயலாளர் உலமா சபையிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் குர்பான் கடமைக்கு உறுதி வழங்கியுள்ளதுடன் முஸ்லிம்களின் சமயக் கடமைகளுக்கு தடை விதிக்கப்படமாட்டாது எனவும் சட்ட திட்டங்களுக்கு அமைய கடமை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உறுதி வழங்கியுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &