இலங்கை வரலாற்றில் வடமாகாண சபைக்காக நடைபெற்ற முதலாவது தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியது.
இந்தத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் அதிகாரத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
இதற்கமைய வட மாகாண சபையில் இலங்கை தமிரசுக்கட்சி 28 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏழு ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
யாழ் தேர்தல் மாவட்டத்தின் ஊர்காவற்றுரை, வட்டுக்கோட்டை, காங்கேசன்துரை, மானிப்பாய்,கோப்பாய், உடுப்பிட்டி, பருத்தித்துரை, சாவகச்சேரி, நல்லூர் யாழ்ப்பாணம் ஆகிய 10 தொகுதிகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது
இதில் ஊர்காவற்துறையை தவிர்ந்த ஏனைய ஒன்பது தொகுதிகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி 81 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.
யாழ் மாவட்டத்தில் மொத்தமாக இரண்டு இலட்சத்து 907 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களை சுவீகரித்துள்ளது.
35 ஆயிரத்து 995 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு. ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 28 ஆயிரத்து 266 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நான்கு ஆசனங்களும், ஏழாயிரத்து 209 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன.
கிளிநொச்சி மாவட்ட மக்களும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமது ஆணையை வழங்கியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 37 ஆயிரத்து 79 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இதற்கமைய அந்தக் கட்சிக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏழாயிரத்து 897 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தை தன்வசப்படுத்தியது.
வவுனியா மாவட்டத்தில் 24 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகளால் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றியை உறுதிசெய்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 41 ஆயிரத்து 225 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நான்கு ஆசனங்கள் கிடைத்த அதேவேளை, 16 ஆயிரத்து 633 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மூன்றாவது அதிகூடிய வாக்குகளாக ஆயிரத்து 991 வாக்குகளைப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட போதிலும் அந்தக் கட்சிக்கு ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
மன்னார் மாவட்டத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
33 ஆயிரத்து 118 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கை மூன்று ஆகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15 ஆயிரத்து 104 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்ட அதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்காயிரத்து 571 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை தனதாக்கிக்கொண்டது.
வடமாகாண சபைத் தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றிற்கு ஒரு ஆசனமேனும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
