BREAKING NEWS

Apr 15, 2013

சென்னையை எதிர் கொள்கிறது மத்தியூஸ் இல்லாத பூனே

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 6ஆவது பருவகாலத்தின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ், பூனே வொரியர்ஸ் அணிகள் ஒன்றையொன்று மோதவுள்ளன. இது இப்பருவகாலத்தின் 19ஆவது போட்டியாக இடம்பெறவுள்ளது.

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இப்போட்டியில் பூனே வொரியர்ஸ் அணி தங்களது வழக்கமான அணித்தலைவரான அஞ்சலோ மத்தியூஸின்றியே களமிறங்கவுள்ளது. சென்னையில் இலங்கை வீரர்கள் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அஞ்சலோ மத்தியூஸ் இன்றைய போட்டியில் பங்குபற்ற மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பூனே வொரியர்ஸ் அணியின் தலைவராக யுவ்ராஜ் சிங் செயற்படலாம் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தால் றொஸ் டெய்லர்  அணித்தலைமைப் பொறுப்பை ஏற்கலாம்.

இத்தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் பங்குபற்றி 2 போட்டிகளில் வெற்றியும், ஒரு தோல்வியும் அடைந்துள்ளது. ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் இறுதிப் பந்தில், முறையற்ற பந்துவீச்சு மூலமாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தது.

மறுபுறத்தில் பூனே வொரியர்ஸ் அணி 4 போட்டிகளில் பங்குபற்றி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதோடு, ஒரேயொரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது. எனவே அவ்வணி பலத்த அழுத்தத்திற்குள்ளாகியுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:
சென்னை சுப்பர் கிங்ஸ்: மைக்கல் ஹசி, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, டுவைன் பிராவோ, சுப்ரமணியம் பத்ரிநாத், மகேந்திரசிங் டோணி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், கிறிஸ் மொறிஸ், அங்கிற் ராஜ்பூட், டேர்க் நன்னீஸ்

பூனே வொரியர்ஸ்: ரொபின் உத்தப்பா, ஆரொன் ஃபின்ச், திருமல்செட்டி சுமன், றொஸ் டெய்லர், யுவ்ராஜ் சிங், ஸ்டீவன் ஸ்மித், அபிஷேக் நாயர், மிற்சல் மார்ஷ், புவனேஷ்வர் குமார், றாகுல் சர்மா, அஷோக் டின்டா

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &