BREAKING NEWS

Nov 25, 2014

தலையில் பந்து தாக்கிய உடனேயே சுய நினைவினை இழந்த பிலிப் ஹியூக்ஸ்,


அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலையில் எதிர்பாராதவிதமாக பந்து தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய முதல் தர கிரிக்கெட் போட்டியானது, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது.

இந்த போட்டியின்போது, துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பிலிப்பின் தலையில் பவுன்சராக வந்த பந்து எதிர்பாராத விதமாக பலமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த பிலிப் உடனடியாக அம்புலன்ஸ் மூலமாக சிட்னியில் உள்ள எஸ்.டி.வின்செண்ட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பிலிப்பின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரைக் காப்பாற்ற அவசர அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. 24 மணி நேரம் முதல் 48 மணி நேரங்கள் கழித்துதான் அறுவை சிகிச்சையின் முடிவு தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதான பிலிப் தன்னுடைய இடது தலையில் பந்து தாக்கிய உடனேயே சுயநினைவினை இழந்து விட்டார். 63 ஓட்டங்கள் எடுத்திருந்த ஹியூக்ஸ், எதிரணியின் பந்து வீச்சுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார். அந்நிலையில் ஷேன் அபாட்டின் சுழற் பந்து வீச்சில் எறியப்பட்ட பந்தானது ஹெல்மெட் அணிந்திருந்த ஹியூக்ஸின் இடது தலையில் பட்டு தாக்கியவுடனேயே ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது.

பதறிப்போன மற்ற வீரர்களும், மருத்துவ உதவியாளர்களும் முதலுதவி அளித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப் ஹியூக்ஸ் அவுஸ்ரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &