
-அழகன் கனகராஜ் Tm-
அடுத்த ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, அதனுள் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகளுக்குள் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அரசியல் புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயத்தை கேட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, பொது வேட்பாளரை தேர்தெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதியான முடிவெதனையும் எடுக்காமல் அரசியலை நாடிபிடித்து பார்த்துகொண்டிருக்கின்றது.
மற்றுமொரு பங்காளியான ஜாதிக ஹெல உறுமய, அரசியலமைப்பில் செய்யவேண்டிய 19ஆவது திருத்த யோசனைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திகொண்டிருக்கின்றது.
ஹெல உறுமய, அரசியல் ரீதியான முக்கியமான தீர்மானமொன்றை, நாளை 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எடுக்கவிப்பதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் மத்தியகுழு அன்றைய தினம் கூடுவதுடன் அரசாங்கத்துக்கும் ஹெல உறுமயவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பிலான அறிக்கையும் மத்தியக்குழுவுக்கு கையளிக்கப்படவிருக்கின்றது.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி, உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவையெல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் மலையக கட்சிகள் யாவும் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாக ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டன.
இந்நிலையில், அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறு இருக்கின்றதா என்பது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை இன்று திங்கட்கிழமை 10ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 5ஆம் திகதி உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
உயர்நீதிமன்றம், தனது அபிப்பிராயத்தை இன்று திங்கட்கிழமை மாலை 3மணிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அறிவிக்கவிருக்கின்றது.
உயர்நீதிமன்றம் தனது அபிப்பிராயத்தை அறிவித்ததன் பின்னர், இலங்கை அரசியலில் பாரிய புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களுடைய அபிபிராயத்தை வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு முன்னதாக எழுத்து மூலமாக வழங்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அறிவித்திருந்தார்.
அதன்பிரகாரம் கட்சி, அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தங்களுடைய வாதங்கள் அடங்கிய 35 ஆவணங்கள் உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று வெளியாகும் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்துக்கு பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், ஆளும் கட்சிக்கும், ஆளும்கட்சி அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சிக்கு கட்சிமாறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்து கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்டாராயின் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவருகின்றது.
மங்கள சமரவீர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம் இணைங்கி கொண்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலுக்காக 275 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளதுமை தெரிந்ததே.