
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கென்ய அணிக்கும் இலங்கை 'ஏ' அணிக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடரின் 6ஆவது போட்டியில் இலங்கை 'ஏ' அணி வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 'ஏ' அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கென்ய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.
ஓர் ஓட்டத்திற்கு முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 12 ஓட்டங்களுடன் தடுமாறியிருந்தது. அதன் பின்னர் இணைப்பாட்டங்கள் பகிரப்பட்டு, அவ்வணி 131 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் கென்ய அணி சார்பாக இர்பான் கரிம் 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் றகெப் பட்டேல் 12 பந்துகளில் 28 ஓட்டங்களையும் கொலின்ஸ் ஒபுயா 28 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை 'ஏ' அணி சார்பாக இஷான் ஜெயரத்ன 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் லஹிரு ஜெயரத்ன 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் இசுரு உதான ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
132 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை 'ஏ' அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
முதலாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் இடைநடுவில் சிறிது மந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், இறுதியில் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை 'ஏ' அணி சார்பாக உபுல் தரங்க 45 பந்துகளில் 48 ஓட்டங்களையும் மஹேல உடவத்த 36 பந்துகளில் 31 ஓட்டங்களையும் கித்துருவன் விதானகே 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கென்ய அணி சார்பாக ஹிரேன் வரய்யா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் நெஹேமியா ஒடியம்போ, றகெப் அகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்படி, 6 போட்டிகள் முடிவில் இத்தொடரில் இலங்கை 'ஏ' அணி 5 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.