
(Purujoththaman Thangamayl)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழர்கள், சர்வதேசம்(?), ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் மட்டுமல்ல; வடக்கில் வாக்களித்த தமிழ் மக்களே கூட இவ்வளவுக்கு அதிரும் வெற்றியொன்றை எதிர்பார்த்திருக்கவில்லை. வெற்றி ஆர்ப்பரிப்பினை வடக்கின் 80 வீதத்துக்கும் அதிகமான மக்களின் கண்களில் காண முடிகிறது. அவர்களின் மனங்களினூடு உணரவும் முடிகிறது. ஆம், நிச்சயமாக பெரிய வெற்றி தான்.
தமிழ் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பித்த போது முன்வைக்கப்பட்ட அடிப்படைக் காரணங்கள் அநேகமாக இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன. போராட்டத்தின் வடிவங்கள் மட்டும் காலத்துக்கும்- சர்வதேச சூழலுக்கும் ஏற்ப மாறிக் கொண்டிருக்கின்றன. அவ்வளவுதான். அஹிம்சையில் ஆரம்பித்து ஆர்ப்பாட்டம் என்று மாறிய போராட்ட வடிவங்கள் ஆயுத வழியில் ஓங்கி; ஓய்ந்து போனலும், மக்களிடம் இருக்கிற போராட்ட குணம் மாத்திரம் அடங்கிவிடவில்லை என்பதை வடக்கின் தேர்தல் உணர்த்தியது. எம்முடைய உரிமைப் போராட்டங்களை மீண்டும் நிறுவுவதற்கான உடனடியாக கிடைத்த தேர்தலை ஏகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் மக்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- வடக்கு தமிழர்களும் பெற்றுள்ள வெற்றியை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ, தமிழ் மக்களுக்கோ, ஏன் அரசாங்கத்துக்கோ அல்லது சர்வதேசத்துக்கோ கூட தெரியாது. ஆனால், தமிழ் மக்களின் போராட்ட குணம் மாத்திரம் மாறிவிடவில்லை என்று உணர்ந்திருப்பார்கள்.
கார்ப்பெட் வீதிகளுக்குள்ளும், லக்ஷ்பானா மின்சாரத்துக்குள்ளும், யாழ்தேவி ரயிலுக்குள்ளும் தமது உரிமைப் போராட்டங்களை தமிழ் மக்கள் தொலைக்கமாட்டர்கள் என்பதையும், ஆறாத வடுக்களாக பதிக்கப்பட்ட கோரங்களை இலகுவாக மறந்துவிடுவார்கள் என்று நினைத்தவர்களின் கனவில் கல்லும் எறியப்பட்டிருக்கிறது.
நாம் வெற்றி பெறும் போதும்; எதிராக தோற்கடிக்கப்படும் போதும் நிறைய உணர்ச்சி வசப்பட்டு போகிறோம். நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிற இந்த பகுதிக்குள்ளும் நிறைய உணர்ச்சி வசப்படுதலுக்கான கணங்கள் இருக்கும். ஏனெனில், உணர்ச்சிகளை தூக்கி வைத்துவிட்டு எழுத நினைக்கிறேன். முடியவில்லை. ஆனால், யதார்த்தங்கள் என்னத்தையெல்லாம் போதிக்கும் என்பதை உணர்ச்சி வசப்பட்ட பின்னராவது யோசித்துக் கொள்ளுங்கள். அது, எமக்கு எமது சந்ததிக்கு அவசியமானது. ஏனெனில், மீண்டும் கோரமாக கொலைகுடிக்கும் களங்களுக்குள் யாரையும் சாகடித்துவிட முடியாது.
வடக்கு தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தை நிறைய உலுக்கிப் பார்க்க வைத்துவிட்டது. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை கொண்டாட அனுமதிக்கவில்லை. சர்வதேச ரீதியில் தமிழர் போராட்டங்களில் நியாயமே இல்லை என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்த அரசாங்கம் மீண்டும் வேறுகளத்தில் செயலாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில், போலி வார்த்தைகளை வடக்கின் தேர்தல் முடிவுகள் இலகுவாக உடைத்துவிட்டன. ஆக, அரசாங்கத்துக்கு உடனடியாக வடக்கிலும்- சர்வதேச ரீதியிலும் எதிர்வினையாற்ற வேண்டிய தேவை உண்டு. அதை அரச அதிகாரிகளினூடு முதலில் செய்ய ஆரம்பிக்கலாம்.
அவசர நடவடிக்கை:
பொலிஸ் அதிகாரங்களைப் பொறுவதற்கு முன்னர் வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்ததும் எப்படியாவது போராடி காணி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது, வடக்கில் தமிழ் மக்களின் இனப்பரப்பல் குலைக்கப்படுவதை தவிர்க்க உதவும். ஏனெனில், வவுனியா தெற்கு ஏற்கனவே சிங்கள மயமாகிவிட்டது. மன்னாரின் சில பகுதிகளிலும் தமிழ் மக்களின் செறிவை குறைக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெறுகின்றன. அதன் அடுத்த காட்சி முல்லைத்தீவில் அண்மைக்காலத்தில் அரங்கேற்றப்பட்டது. அதாவது 150க்கும் மேற்பட்ட சிங்கள மீனவ குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. வடக்கின் பெருநிலப்பரப்பை முல்லைத்தீவு மாவட்டமே கொண்டுள்ளது. முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்களை அரச அதிகாரிகளினூடு செய்வதன் ஊடக தனது முதலாவது எதிர்வினையை அரசாங்கம் முன்னெடுக்கலாம். ஆக, காணி அதிகாரத்தைப் பெற்று தமிழ் இன பரம்பலை குலைக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. அதை செய்யாது விட்டு கூப்பாடு போட்டுக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. புரிந்து கொள்ளுங்கள்; செயலாற்றுங்கள்….!!