ஆப்கன் தேசியக் கால்பந்துக் குழு தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்குழுவை வரவேற்க தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கான ஆப்கானிய கால்பந்து ரசிகர்கள் குழுமியிருந்தனர்.
ஒரு சர்வதேச விளையாட்டுப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்வது இதுவே முதல் முறை.
ஆப்கானியக் கால்பந்துக் குழுவினர் தேசிய கால்பந்து விளையாட்டரங்கில் தாங்கள் வென்ற கோப்பையைக் காட்டியபோது, ஆப்கானிய ரசிகர்கள், கொடிகளை அசைத்தும், உற்சாகக் குரலெழுப்பியும் விசிலடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆப்கானியக் குழு, ஆறு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவை 2-0 என்ற கோல் கணக்கில் புதனன்று காட்மாண்டுவில் தோற்கடித்தது.
ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமித் கார்சாய், வென்று திரும்பிய ஆப்கானியக் குழுவினரை வரவேற்க, காபூல் விமான நிலையம் சென்றிருந்தார்.
